சிறப்பு செய்திகள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி பரிதாப பலி

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட 5பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வாகைகுளம் சாலையில் உள்ள அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வரும் அனுசுயாதேவி என்பவருக்கு சொந்தமான வி.பி.எம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்ற சரவெடி தயாரிக்கும் அறையில் மருந்து கலந்து கொண்டிருந்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகருகே இருந்த நான்கு கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இதில் ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உட்பட ஐந்து பேர் உடல் சிதறி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடல் வெடிவிபத்து நடந்த இடத்தில் இருந்து 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டு தலை, உடல், கை, கால் என தனித்தனியாக சிதறி கிடந்தன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிந்துபட்டி காவல் நிலைய போலீசாரும், வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளும் வெடிவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல் அங்கங்கே சிதறி கிடந்தன. இதனால் உறவினர்கள் இறந்தவர்களை அடையாளம் காண முடியாமல் கதறி அழுதனர். இந்த காட்சி நெஞ்சை பிழிவதாக இருந்தது. வெடிவிபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்