தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மதுரை
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நேரில் ஆறுதல் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பணி புரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். 13க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், வெடிவிபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் விபத்து தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த விபத்து சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அறிவுறுத்தலின்படி போர்க்கால நடவடிக்கை எடுத்து அரசு உரிய இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும்.
இந்த பட்டாசு ஆலையில் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளதா, லைசென்ஸ் புதுக்கப்பட்டுள்ளதா என்ற விவரம் தெரியவில்லை. இந்த வெடி விபத்தில் இங்கு பணி புரிந்தவர்களின் உடல்கள் எல்லாம் சிதறி கிடந்து அடையாளம் தெரியாமல் உள்ளன.
அதேபோல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நிறைய பட்டாசு ஆலைகள் உள்ளன. ஆனால் இங்கு ஒன்று, இரண்டு தான் உள்ளன. விவசாயத்தில் வேலை செய்பவர்கள் வேலை இல்லாத நேரத்தில் இங்கு பணிபுரிகின்றனர்.
இப்படி உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் பொழுது இந்த விபத்து ஏற்படும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அதேபோல் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலையும் கூறும்படி கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் எங்களுக்கு ஆணையிட்டுள்ளார். அதன்படி கூறியுள்ளோம். அதைத்தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.