தற்போதைய செய்திகள்

சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய்க்கு ரூ.360 கோடியில் புதிய இணைப்பு திட்டம் : அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்

சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய்க்கு ரூ.360 கோடியில், புதிய இணைப்பு திட்டம் தயாரிப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து கீரனூர் அணை வரை நந்தன் கால்வாய்க்கு புதிய இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு ரூ.360 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், இந்த புதிய திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். மேலும், விழுப்புரம் மாவட்ட எல்லையில், 12.400 கி.மீட்டர் முதல் 37.8 கி.மீட்டர் தொலைவில், நந்தன் கால்வாயை புனரமைக்கும் பணிக்காக 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, திருவண்ணாமலை செயற்பொறியாளர் குமார், நகராட்சி ஆணையாளர் சுமதி, சப் கலெக்டர் டாக்டர் அனு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவிப்பொறியாளர்கள் கனகராஜ், ஞானசேகர், திண்டிவனம் டி.எஸ்.பி.,(பொறுப்பு) அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.