தமிழகம்

பெண்களுக்கு கழக அரசு பாதுகாப்பாக இருக்கும்-முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை, பிப். 19-

பெண்களுக்கு கழக அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

அம்மா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது சேவல் சின்னத்தில் ஜெயித்து அம்மாவுடன் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அம்மா அவர்கள் அமர்ந்திருந்தார். எதிர்ப்புறம் திமுக தலைவர் கருணாநிதி அமர்ந்திருந்தார். அப்போது அவர் முதலமைச்சர். அம்மா எழுந்து பேச எழுந்தார். உடனடியாக திமுக.காரர்கள் அம்மா முகத்தின் மீது புத்தகத்தை வீசி எறிந்தார்கள்.

சில திமுக எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள். சில அமைச்சர்கள் அம்மாவின் தலைமுடியை பிடித்து இழுத்தார்கள். கொடூரமான காட்சி. சிந்தித்துப் பாருங்கள். சட்டம் இயற்றுகின்ற மாமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர், ஒரு பெண் என்றும் பாராமல், பெண்களுக்கு இப்படிப்பட்ட கொடுமை இழைத்த கட்சி இந்த நாட்டை ஆள வேண்டுமா? சட்டம் இயற்றுகின்ற மாமன்றத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, எப்படி திமுக நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்?

ஆகவே, தான் நாங்கள் சொல்கிறோம். இப்போது தமிழ்நாடு, சட்டம்- ஒழுங்கை பேணிக்காப்பதிலே இந்தியாவிலேயே முதல் மாநிலம். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. திமுக வந்தால் பெண்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள், சுதந்திரமாக வாழ முடியாது. திமுகவினரால் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் உங்களுக்குத் தெரியும். ஆகவே, கழக அரசு உங்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கிறது.

தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் மற்றும் முழு கரும்பு, அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பை நாங்கள் கொடுத்தோம். கடந்த தைப்பொங்கலுக்கு 1,000 ரூபாய், இந்த தைப்பொங்கலுக்கு 2,500 ரூபாய், கொரோனா வந்தபோது எட்டு மாதங்கள் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை மற்றும் குடும்பத்திற்கு 1,000 ரூபாயும் கொடுத்தோம்.

எனவே, போன தைப்பொங்கலிலிருந்து இந்த தைப்பொங்கல் வரையில் எல்லா குடும்ப அட்டைக்கும் 4,500 ரூபாய் கொடுத்த அரசு அம்மாவின் அரசு. திமுக ஆட்சியில் நூறு ரூபாயாவது கொடுத்தார்களா? ஏழை மக்களை வாழ வைக்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். அதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டுதலின்பேரில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்தத் தடையையும் தகர்த்தெறிந்து அந்த வழக்கில் வெற்றி பெற்று, ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினோம்.

இங்குள்ள விஜயநாராயணன் என்ற பெரிய ஏரி மூலம் 64 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுகிறார்கள் என்று இந்தப் பகுதியின் விவசாயப் பெருமக்கள் வைத்த கோரிக்கையையும் அம்மாவின் அரசு பரிசீலிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் துன்பங்களை களைந்து அவர்களுக்கு உதவி செய்கிற அரசு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் அரசு தொடர, இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.