தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை

கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார்.

கோவை பேரூர் செட்டிபாளையத்தில் கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் 50 காலம் காணாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

கொரோனா காலத்தில் எந்தவித உதவியும் செய்யவில்லை. தலைக்கு அலங்காரம் செய்வதற்காக இரண்டரை கோடி செலவிட்டுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல இந்த தேர்தலிலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசுவார். ஆனால் திமுகவிடம் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.

கழக அரசு நிறைவேற்றும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை எல்லாம் திமுக முயற்சியால் கொண்டு வரப்பட்டது என ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தமிழக முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டனர். கழக அரசு செயல்படுத்திய திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தையாவது ஒவ்வொரு வீட்டிலும் பெற்று பயன் அடைந்து இருப்பார்கள். அவர்களிடம் கழக அரசின் சாதனை திட்டங்களையும், மக்களுக்கு செய்துள்ள பணிகளையும் எடுத்துரைத்து வாக்கு சேகரியுங்கள்.

நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். ஆகவே மக்களிடத்தில் நெஞ்சை நிமர்த்தி வாக்கு கேட்கும் உரிமை கழகத்திற்கு மட்டுமே உண்டு. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனித பிறந்தநாளை அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

கொரோனா காலத்தில் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியதை போல வரும் தேர்தலில் ஒவ்வொருவரும் பணியை சிறப்பாக செய்தாலே நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் கழக நிர்வாகிகளோடு ஒருங்கிணைந்து செயலாற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக அயராது பாடுபடுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இதனைத்தொடர்ந்து கழக செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அதேபோல் காங்கிரஸ், திமுக, மதிமுக, உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்தும் 2000-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர்.