தற்போதைய செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

சென்னை

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதை அடுத்து அங்கு 214 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழிலகத்தில் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 236 மி.மீ பெய்துள்ளது. இது தென்மேற்கு பருவமழை கால சராசரியை விட 56 சதவீதம் அதிகம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்று (10 ந் தேதி) சராசரியாக 18.11 மி.மீ மழை பெய்துள்ளது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நிவாரண முகாம்களில் 132 பேரும், குந்தாவில் 727 பேரும், கூடலூரில் 362 பேரும், பந்தலூரில் 125 பேரும் என மொத்தம் 1345 பேர் 20 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை பெய்த மழையில் 142 வீடுகள் பகுதியாகவும், 4 வீடுகள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 4 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 130 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இருப்பினும் 22 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் 192 மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் அங்கேயே தங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.