சிறப்பு செய்திகள்

விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைக்கு 28-ந்தேதி அடிக்கல் -துணை முதலமைச்சர் தகவல்

தேனி

தேனி வீரபாண்டி அருகே சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைக்கு வருகிற 28-ந்தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு முதல் தமிழக மக்கள் வாழ்விற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நீண்ட காலத்திற்கு பயன்தரும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதனைத்தொடர்ந்து, அம்மா அவர்கள் வழியில், தமிழக அரசு புதிதாகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

தனிநபர் வருமானத்தைப் பெருக்குவதினால் குடும்ப பொருளாதாரம் உயரும், குடும்பப் பொருளாதாரம் உயர்ந்தால் ஒரு கிராமத்தின் பொருளாதாரமும், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் என்பதனை கருத்தில் கொண்டு தனிநபர் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு, அடித்தட்டு மக்களுக்க இவை மூன்றும் கிடைக்கப்பெறும் வகையில், விலையில்லா அரிசி, விலையில்லா வேட்டி, சேலைகள், முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மற்றும் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் போன்றவைகளை செயல்படுத்தி, தமிழக மக்களின் வாழ்விற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் இதுவரை 2,600 நபர்களுக்கு வீடுகள் கட்டி தற்போது வழங்கப்படும் தருவாயில் உள்ளது. விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதுதவிர, கூடுதலாக 2,000 நபர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தொழில் சார்ந்த தொழிற் சாலைகளை உருவாக்கிடும் பொருட்டு, புதிதாக தொழிற்போட்டை (சிட்கோ) தொடங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வீரபாண்டிக்கு அருகில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் தொழிற் பேட்டை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான தொடக்க பணிகள் வருகின்ற 28-ந்தேதி அன்று நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் உட்பட இத்தொழிற் பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை சேவை தொடங்குவதற்கு, தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உறுதுணையுடன் தமிழக அரசால் முழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் அகல ரயில் பாதை சேவை தொடங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மேலும், முதுவார்குடி முதல் டாப்ஸ்டேசன் வரை ரூ.11.50 கோடி மதிப்பீட்டிலும், சோத்துப்பாறை முதல் அகமலை வரை ரூ.36.76 கோடி மதிப்பீட்டிலும் சாலை மேம்பாட்டுப்பணிகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.