தற்போதைய செய்திகள்

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் கிணற்றில் போட்ட கல் -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

பசுத்தோல் போர்த்திய புலியாக வந்த அரசாணை 115 ஐ தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என்று கூறினார்களே. தி.மு.க சொன்னது என்னாச்சு என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது என்றும் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினந்தோறும் ஆளுகிற அரசுக்கு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் தொடர்ந்து நினைவுபடுத்தி வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள மூன்றரை லட்சம் அரசு பணிக்கு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் எண் 187ல் கூறப்பட்டன. மேலும் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மொத்தம் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசியது தி.மு.க. ஆனாலும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

இன்றைக்கு சமூக நீதிக்கு ஒரு பேராபத்து வரக்கூடிய ஒரு நிலையில், தமிழகத்திலே 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பேராபத்து வரக்கூடிய அரசாணை எண் 115 ஐ எதிர்த்து முதல்முதலாக குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார்.

தமிழ்நாட்டிலே முதல் உரிமைக்குரலாக தி.மு.க. அரசின் அரசாணை 115 ஐ ரத்து செய்ய வேண்டும். பாடுபட்டு கல்வி பயின்று, கனவு நினைவாகிற வகையில் வாழ்நாளெல்லாம் தன் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியறிவு பெற்று எப்படியாவது தன் குடும்பத்தில் ஒரு அரசு பணியை பெற்றுவிட வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதை தெரிவித்து விடியா தி.மு.க. அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தவர் எடப்பாடியார்.

இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இதனுடைய பேராபத்தை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்வதோடு இந்த அரசினுடைய நடவடிக்கையை சுட்டிக்காட்டினார் எடப்பாடியார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், காவலர் தேர்வு வாரியம் மூலமாக தான் நாம் இளைஞர்களை தேர்வு செய்து ஆட்களை தேர்வு செய்து நாம் அரசு பணியிலே நியமிக்கின்றோம். ஆனால் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பது இந்த அரசாணை 115 சாரம்சம் ஆகும்.

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் தெரிவித்திருந்ததையொட்டி ஓய்வுபெற்ற இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்த குழுவை 18.10.2022-ம் தேதியிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு இந்த குழுவை அமைத்துள்ளது.

அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், அந்த நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையிலே மாற்றங்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது அது மேம்போக்கான வார்த்தைகளாக இருக்கிறது. இந்த 115 அரசாணை பசுத்தோல் போர்த்திய புலியாகும். பார்ப்பதற்கு பசுவாக இருக்கும். ஆனால் புலியாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பை தான் நாம் பார்க்கிறோம்.

ஆள் தேர்வு முறையிலேயே செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை மறைமுகமாக இதில் திணித்து தனியாரை உள்ளே நுழைப்பதன் மூலமாக சமூக நீதி கேள்விக்குறியாகி இருக்கிறது. பணியாளர்களை நியமனம் செய்தல், தனியார் நிறுவனங்கள்கள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையிலேயே பணியாளர்களை பெறுதல்,

சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களின் நியமிக்காமல் முதலிலே தற்கால பணியாளர்களாக நியமித்து தற்காலிக பணியாளர்களை பின்னால் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நியமனம் வழங்குதல் ஆகிய திட்டங்களை இது உள்ளடக்கியதாக இந்த அரசாணை 115 இருக்கிறது.

இதை ஆறு மாத காலத்திலே இந்த சீர்திருத்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளிலே மூழ்கும். இளைய சமுதாயத்தின் அரசு பணி என்கிற கனவு நிறைவேறாமல் போய் விடும். இனி அரசு பணியாளர் என்கிற ஒரு நிலை தமிழ்நாட்டில் இல்லை என்கிற ஒரு சூழ்நிலையை உருவாக்குகிற ஒரு பேராபத்து இளைய சமுதாயத்தை சூழ்ந்து இருக்கிறது.

இளைய சமுதாயம் விழித்துக்கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார், அந்த இளைஞர்களின்ங எதிர்காலத்திற்காக, நன்மைக்காக, பாதுகாப்புக்காக உரிமைக்குரல் கொடுத்தார். இதையடுத்து அரசாணையின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் எடுத்துக்கொண்ட அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதற்காக இளைய சமுதாயம் எடப்பாடியாருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து வருகின்றனர். பசுத்தோல் போர்த்திய புலியாக வெளி வந்த அரசாணை 115 ஐ தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.