தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் -கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரை,

மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க. இனிவரும் தேர்தலில் தோல்வியை தழுவும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டமாக கூறி உள்ளார்.

திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேஜை நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய நவீன வகுப்பறை ஆகியவற்றை கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், பகுதி கழக செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் வட்ட கழக செயலாளர்கள் ஜெயகல்யாணி, நாகரத்தினம், தவுடன், கருத்தமுத்து, நாட்டாமை, முத்துக்குமார், மகாராஜன், பாலமுருகன், கோபால், செல்வம் மற்றும் ஜெயராமச்சந்திரன், செல்வகுமார், மீசைபாண்டி, காசிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு டேபிள், சேர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வகுப்பறைகள், பள்ளி கட்டிடங்கள் இதுபோன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மக்களின் குறைகளுக்கு ஏற்ப எனது சட்டமன்ற உறுப்பினர் நீதியின் கீழ் திட்ட பணிகளை செய்து கொடுத்து வருகிறேன். மேலும் சட்டமன்றத்தில் மக்களின் கோரிக்கை நிறைவேற்ற பல்வேறு கோரிக்கை வைத்தேன். அதை அரசு அறிவித்து விட்டது. ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தி.மு.க. அரசு நடத்தி வருகிறது.

234 தொகுதிகளிலும் மக்களின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ரூபாய் ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டும்,

கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையான நிலையூரில் அரசு கைத்தறி கூடம் வேண்டும், நாகமலை புதுக்கோட்டையில் சிப்காட் அமைக்க வேண்டும், வடபழஞ்சியில் பிரதான கால்வாய் இணைக்க வேண்டும், தென்கால் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி சுற்றுலா தளம் அமைக்க வேண்டும், திருநகர் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்று 10 கோரிக்கைகளை வைத்தேன். ஆனால் இதுவரை எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை.

தி.மு.க தேர்தல் அறிக்கை நிறைவேற்றவில்லை. அதேபோல் 110 விதியின் கீழ் இது போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. அம்மா அரசு வழங்கி திட்டங்களை எல்லாம் இன்றைக்கு முடக்கி விட்டது தி.மு.க. அரசு.

இதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் நாள்தோறும் குரல் கொடுத்து வருகிறார். எனவே இனிவரும் தேர்தலில் தி.மு.க தோல்வியை தழுவும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். தி.மு.க. முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு மீண்டும் வழங்குவார். மக்கள் நலனின் அக்கறை கொண்ட இயக்கம் கழகம், மக்களின் நலனின் சிறிதும் அக்கறையில்லாத கட்சி தி.மு.க.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.