தற்போதைய செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு திட்ட செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம்-அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

திண்டுக்கல்

பெண்கள் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் தொப்பம்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில், பழனி, தொப்பம்பட்டி வட்டாரங்களை சேர்ந்த 566 பெண்களுக்கு ரூ.2.47 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் ரூ.1.72 கோடி மதிப்பில் 4.528 கிலோ தங்கம் மற்றும் 65 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஏழை எளியோர், ஆதரவற்றோர் என சமுதாயத்தில் அடித்தட்டு, மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார்.

ஆணுக்கு நிகர் பெண்கள் என்பதனை கருத்தில் கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை அம்மா செயல்படுத்தினார். அம்மா அவர்கள் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அம்மா செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த திட்டங்கள் அனைத்தும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்து, தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படுகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றான அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய பெண்களுக்கான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், தற்போது பெறப்பட்டுள்ள மனுக்களின்படி 2,221 பட்டதாரி பெண்களுக்கும், 10-ஆம் வகுப்பு வரை படித்த 1,135 பெண்களுக்கும் என மொத்தம் 3,356 பெண்களுக்கு திருமண நிதியுதவி ரூ.13.94 கோடி மற்றும் தாலிக்கு தங்கம் ரூ.10.20 கோடி மதிப்பில் 26.848 கிலோ தங்கம் வழங்கப்பட்டு வருகிறது

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, பழனி ஊராட்சி ஒன்றியம், அமரபூண்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா விளையாட்டுப் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார்.