சிறப்பு செய்திகள்

பொதுமக்கள் குறைகளை தீர்க்க ஓடோடி வருவேன்-முதலமைச்சர் உறுதி

சென்னை

குடும்பத்தில் ஒருவனாய் மக்கள் குறைகளை தீர்க்க ஓடோடி வரும் பழனிசாமியாய் இருப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உணர்ச்சிகரமாக பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பேசியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கோட்டை சேலம் மாவட்டம் என்பதை நிருபிக்க வேண்டும்.

2011 மற்றும் 2016லே 11 சட்டமன்ற தொகுதியில் 10 சட்டமன்ற தொகுதியில் வெற்று பெற்று தமிழகத்தில் அதிக சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வெற்ற மாவட்டம் என்ற பெருமையை பெற்றோம்.

அதேபோல இந்த முறையும், 11 சட்டமன்ற தொகுதியிலே கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்கினை செலுத்தி வெற்றிபெறச் செய்து சேலம் மாவட்டம் தமிழகத்தில் ஒரு முன்மாதிரியான மாவட்டம் என்பதை உருவாக்கித் தாருங்கள். உங்களில் ஒருவனாக கேட்கிறேன்.

உங்கள் குடும்பத்தில் ஒருவனான என்னை முதலமைச்சராக கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுத்துள்ளனர். இது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை. எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். உங்களில் ஒருவனாய், குடும்பத்தில் ஒருவனாய் உங்களது குறைகளை தீர்க்க ஓடோடி வரும் பழனிசாமியாய் இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு எப்பொழுதும் முதலமைச்சர் என்ற எண்ணமே கிடையாது. இங்கே அமர்ந்திருக்கும் அத்தனை பேரையும் முதலமைச்சராக பார்க்கின்றேன். நீங்கள் என்ன ஆணையிடுக்கின்றீர்களோ அதைச் செய்கின்ற பணிதான் முதலமைச்சர் பணி. அப்படித்தான் நான் நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஸ்டாலின் அப்படி அல்ல, மூன்று மாதம் கழித்து அவர் முதலமைச்சர் ஆகி விடுவாராம், முதல் கையெழுத்து போடுகிறாராம். தேர்தலே அறிவிக்கவில்லை, வேட்பாளர்கள் களம் காணவில்லை, வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை அதற்குள் எப்படி இவர் முதலமைச்சர் ஆவார். எப்படி வேகமாக இருக்கிறார் பாருங்கள். இது வேகம் அல்ல, 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் கோரப் பசியில் இருக்கிறார்.

நம்முடைய சகோதரிகள் கவனமாக இருக்க வேண்டும். திமுகவினர் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். அவர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து சேலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் கோட்டையாக மீண்டும் எழுச்சி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வெற்றியைத் தேடித்தாருங்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.