தற்போதைய செய்திகள்

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

காஞ்சிபுரம்,

கமிஷனுக்கு ஆசைப்பட்டு விடியா தி.மு.க. அரசின் வீண் வேலையால் மழைநீர் வடிகாலுக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் மாங்காடு நகராட்சியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ என்று பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது அதில் ஒருவர் குப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்தவர் மாங்காடு பாலாண்டேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமிபதி (42) என்பது தெரியவந்தது. இவர் தனியார் கல்லூரியில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணி செய்து வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

வேலைக்கு சென்றவர் நிலை தடுமாறி கால்வாய்க்காக தோண்டப்பட்டிருந்த 3 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தலை குப்புற விழுந்தவர் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாங்காடு நகராட்சியில் நடைபெறும் மழை நீர் கால்வாய்க்கான பணிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல், கமிஷனுக்கு ஆசைப்பட்டு விடியா திமுக அரசு மழை காலங்களில் இது போன்ற மழைநீர் வடிகால் கால்வாய் பணியை செய்திருப்பது இன்னும் எத்தனை பேரின் உயிரை காவு வாங்குமோ என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏதும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நபர் மழை நீர் கால்வாயில் விழுந்து இறந்த சம்பவத்திற்கு பிறகு நகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் ஓரங்களில் கம்புகள் நட்டு தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது