எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சூளுரை

திருவண்ணாமலை,
வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் நடைபெறும். அதில் அனைத்து தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெற்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க அனைவரும் சபதமேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கழக நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை-வேலூர் சாலை வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில் அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட போளூர், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர கழக நிர்வாகிகளிடம் வழங்கி முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசியதாவது:-
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ன் ஆணையின்படி வரும் 12ம் தேதி சனி மற்றும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் செய்யும் பணி மிக முக்கியம் வாய்ந்தது.தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடை ந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.
இப்பணிகளில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தனி கவனம் செலுத்தி பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நிச்சயம் நடைபெறும் சூழல் உள்ளது.
மக்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்து விட்டது. பால் விலை, வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திமுக கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை மக்களிடம் எடுத்துக்கூறி வரும் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறவும் தமிழக முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினர்.