கன்னியாகுமரி

புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி,

பொதுமக்களின் நலன் கருதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் செல்வதற்கு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வலியுத்தினார்.

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்தை நேரில் சந்தித்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் செல்வதற்கு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பான மனுவினை அவர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இத்துறைமுகத்திற்கு வருவதற்கு ஒற்றையால்விளை-சின்னமுட்டம் மாநில சாலை மட்டுமே உள்ளது.

இப்பகுதியில் மீன் வியாபாரத்திற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், வியாபாரிகளும் மக்களும் வந்து செல்கின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்திற்குரிய வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.

ஒற்றையால்விளையில் இருந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு 1.2 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வாகனங்கள் மீன்பிடி துறைமுகம் வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகிறது. இதற்கு காரணம் அதிக அளவிலான போக்குவரத்து நெருக்கடி தான்.

துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரி மாதவபுரம் பிரதான சாலையை சென்றடைந்தால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். மேலும் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். இதனைக்கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகு கட்டுமான பகுதியில் மின் துறைக்கு சொந்தமான அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதை வழியாக கன்னியாகுமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று சேர்வதற்கு ஏதுவாக புதிதாக புறவழிச் சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தமிழக அரசிற்கு அனுப்பி, தேவையான நிதி ஒதுக்கீட்டினை பெற்று இதனை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சின்னமுட்டம் பங்குத்தந்தை கில்டஸ், கன்னியாகுமரி பங்குத்தந்தை அழகாந்தன், சின்ன முட்டம் ஊர் தலைவர் அந்தோணி செபஸ்டியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவின், தோமையார் விசைபடகு சங்க தலைவர் சில்வெஸ்டர், கன்னியாகுமரி ஊர் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், ஆகியோர் உடன் சென்றனர்.