தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கத்தில் திமுக ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் அனிதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதுமே தி.மு.க கவுன்சிலர்கள் முனியம்மாள் கணேசன், ராணி சேது, கழக கவுன்சிலர் யுவராஜ், பா.ம.க கவுன்சிலர் தீபா கார்த்தி, சுயேட்சை கவுன்சிலர் கோகிலா ஆகியோர் தீர்மானம் புத்தகத்தில் கையெழுத்து முறைகேடாக போடப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்துவிட்டு கூட்டத்தை தொடங்க வேண்டுமென கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்க முடியாமல் திமுக ஒன்றிய குழு தலைவர் அனிதா திணறினார். இதனால் அவர் கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு தனது அலுவலக இருக்கைக்கு சென்று விட்டார். ஒன்றியக்குழு தலைவரின் அடாவடித்தனத்தை கண்டித்து 5 கவுன்சிலர்கள் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலை கைவிட செய்தனர். அதைத்தொடர்ந்து 5 கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு முறையான தீர்வு காணவில்லை என்றால் 5 ஒன்றிய கவுன்சிலர்களும் உடனடியாக தங்களது பதிவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும் திமுக சேர்மானின் கணவர் அரசு வாகனங்களை சொந்த நிகழ்வுக்காக உபயோகப்படுத்துகிறார்.
மேலும் ஒவ்வொரு கவுன்சிலர் இல்லத்திற்கும் நேரில் சென்று தீர்மான புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும் என மிரட்டி வருகிறார் என ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். திமுக ஒன்றிய குழு தலைவரின் அராஜகம், அடாவடித்தனம், சர்வாதிகாரப்போக்கிற்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.