தற்போதைய செய்திகள்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்

திருவண்ணாமலை,

கழகத்தின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கழகத்தின் சார்பில் ஆரணி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அண்ணா பிறந்தநாள்விழா கொண்டாடப்படுவதாக கூறியும்,
கழகத்தின் பெயரை பயன்படுத்தியும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் எ.அசோக்குமார் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அம்மனுவில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அ.இ.அ.தி.மு.க.வின் ஆரணி நகர செயலாளராக உள்ளேன். 2022ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் என கூறிக்கொண்டு 15.9.2022 அன்று நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஆரணி நகரில் ஊர்வலம் செல்ல பையூர் எ.சந்தானம் என்பவர் உங்களிடம் அனுமதி கோரி மனு கொடுத்துள்ளதாக அறிகிறேன், தற்போதைய சூழ்நிலையில் அஇஅதிமுக என்ற கட்சியின் பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சட்டப்படி உரிமை இல்லை.

எனவே அ.இ.அ.தி.மு.க கட்சியின் பெயரை பயன்படுத்தி பையூர் எ.சந்தானம் தலைமையில் 15.9.2022 அன்று நடைபெறுவதாக இருக்கும் அண்ணா பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது எனவும், சட்டபடி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆரணி நகர சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் புகாரை பதிவு செய்தார். அப்போது உடன் மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், நகரமன்ற துணை தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், ஜெயப்பிரகாசம், அருகாவூர் ரங்கநாதன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வி.பி.இராதாகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் பாண்டியன், வக்கீல் வி.வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.குமரன், பாரதிராஜா, சதீஷ், சிவக்குமார், அக்ராபாளையம் குணா, தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் உள்ளிட்டோர் இருந்தனர்.