தற்போதைய செய்திகள்

நாகர்கோவிலில் 350 பெண்களுக்கு திருமண நிதியுதவி- தாலிக்கு தங்கம்- என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி,

நாகர்கோவிலில் 350 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் திருமண நிதியுதவி வழங்கும் விழா மற்றும் மாவட்ட உயர்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா தரவு அட்டை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு, 350 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கி பேசியதாவது:-

அம்மா அவர்கள் அறிவித்து, செயல்படுத்தி வந்த அனைத்து அரசு திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சரின் பல்வேறு சிறப்பான திட்டங்களில் ஒன்றான உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த அரசு உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கும் நான்கு மாதங்களுக்கான விலையில்லா தரவு அட்டை தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என அறிவித்து, அத்திட்டத்தை ஒரு சில நாட்களுக்கு முன்னாள் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 28 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் 21 தொழில் நுட்பக்கல்லூரிகளைச் சேர்ந்த 13,782 மாணவ, மாணவியர் மற்றும் 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த் 25,168 மாணவ, மாணவியர்கள் என ஆக மொத்தம் 38,950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா தரவு அட்டைகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், இத்திட்டம் இன்றுமுதல் வழங்கப்படுகிறது.              

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.