எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரை

சேலம்,
தி.மு.க. ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரைத்துள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்த முகாம் இம்மாதம் 12, 13, 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சேலம் மாநகருக்குள் நடைபெறும் முகாமில் பங்கேற்க உள்ள கழக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு, சக்திவேல், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர் மாவட்ட கழக பொருளாளர் பங்க் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் பேசியதாவது:-
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க சேலம் மாநகர் முழுவதும் ஒவ்வொரு வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்களுடன் இணைந்து 17 வயது பூர்த்தி அடைந்த கழகத்திற்கு ஆதரவு தரக்கூடிய இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்க செய்ய வேண்டும். விடுபட்டுள்ள வாக்காளர்களின் பெயர்களை சேருங்கள், வெளியூருக்கு மாறுதலானவர்கள், காலமானவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை நீக்கம் செய்யுங்கள்.
மேலும் 18 மாத விடியா தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்து விட்டார். தி.மு.க. அரசு மக்கள் மீது எந்த அக்கறையும் கொள்ளவில்லை. கழக ஆட்சியின் போது மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமான பொருட்களின் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய, நடுத்தர மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றி விட்டது.
நியாய விலை கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் அதனை பொதுமக்கள் வாங்குவதற்கு தயாராக இல்லை. அதன் காரணமாக கடந்த மூன்று மாத அரிசி இருப்பு ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் உள்ளது.
எனவே தி.மு.க. ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். இந்த சூழ்நிலையை கழகத்தினர் பயன்படுத்திக்கொண்டு, வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்தேர்தல் வந்தாலும் பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அனைவரும் ஒற்றுமையோடு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அமர வைக்க தேர்தலில் உழைத்து கழகத்திற்கு வெற்றியை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் பேசினார்.