தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் எதுவும் செய்யவில்லை, தி.மு.க.வின் நிலைபாடுப் வெறும் பூஜ்ஜியம் தான் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை

கொரோனா தடுப்பு பணியில் திமுக எந்த பணிகளும் செய்யவில்லை, தி.மு.க வின் நிலைபாடுப் வெறும் பூஜ்ஜியம் தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு அறிவுரைகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு பரிசுப் பொருட்கள், கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் தினசரி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோய் தொற்று 7 சதவீதமாக ஆக கண்டறியப்பட்டுள்ளது. இதனை 6 சதவீதமாக ஆக குறைக்கும் முயற்சியில் முன்களப் பணியாளர்களும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த வருடம் 56 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு கிடைத்துள்ளது. வேளாண் உற்பத்தியை சந்தைப் படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளை தடுக்கவே இ-பாஸ் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாகக் கூறிய உதயநிதியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க இ-பாஸ் அவசியம் என்பதாலேயே அது நடைமுறையில் உள்ளது தற்போது இ-பாஸ் பெறுவதை எளிமைப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க எந்த பணியையும் செய்யவில்லை. இந்த விஷயத்தில் தி.மு.க வின் நிலைபாடு வெறும் பூஜ்ஜியம்தான். தி.மு.க என்னென்ன கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ்.பாபு, பெரம்பூர் ஆர்.மகேஷ், திரு.வி.க.நகர் தொகுதி பகுதி கழக செயலாளர் இரா.வீரமணி, ஜமாலியா ஆர்.ராகேஷ் ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெயஸ்ரீ மகேஷ், சென்னை மாநகராட்சி 6-ம் மண்டலம் கொரோன தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் அரவிந்த், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அருணா, நாச்சியான், செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் ஜி.கே.பாபு, மாறன், வினோத் மச்சாடோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.