தற்போதைய செய்திகள்

28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அம்மாவின் அரசு வரலாற்று சாதனை படைத்திருக்கிறது – முதலமைச்சர் பேட்டி

சென்னை 

தமிழக வரலாற்றிலேயே 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அம்மாவின் அரசு வரலாற்று சாதனை படைத்திருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

கேள்வி – இ-பாஸ் முறையை ரத்து செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீங்களும் விளக்கம் அளித்தீர்கள். மீண்டும் அக்கோரிக்கையை வலியுறுத்துகிறார்களே.

பதில் – நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் அதற்கான பதிலை தெளிவாக சொல்லிவிட்டேன். இ-பாஸ் முறையை எளிதாக்க வேண்டும் என்பதற்கு தான் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஒரு குழுவோடு, மேலும் ஒரு புதிய குழு அமைக்கப்பட்டு, இ-பாஸ் வழங்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

கேள்வி – பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற விலையில்லா அரிசி வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, இது தமிழக விவசாயிகளிடம் வாங்கினால் நம் விவசாயிகள் பயன்பெறுவார்களே.

பதில் – தமிழ்நாட்டில் ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் தமிழகத்தில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் தான் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்துள்ளோம். இந்த ஆண்டு தான் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திருக்கிறோம். இங்கே அதிகமாக நெல் கொள்முதல் இருக்கிறது. இங்கு தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை அரசு கொள்முதல் செய்கிறது. தமிழக வரலாற்றிலேயே 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அம்மாவின் அரசு வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.