தற்போதைய செய்திகள்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி-அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கு 2ஜிபி தரவு அட்டைகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழகம் முழுக்க 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 1666 புதிய பாடப் பிரிவுகளை கல்லூரிகளில் தோற்றுவித்தது தமிழக அரசு தான். பள்ளிக் கல்வித்துறையில் இடைநிற்றலை தடுக்க வேண்டி தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர் அதிக அளவில் பயனடையும் வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயக் கல்லூரி அமைக்க முதல்வரிடம் மாவட்டம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு அனுமதி தந்ததுடன், நடப்பு கல்வியாண்டியிலேயே மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகம் முழுக்க பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், பி.எட்., என 92 புதிய கல்லூரிகளை தோற்றுவித்தது இன்றைய தமிழக அரசு தான்.

கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,331 ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1058 ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வு நடத்தப்பட்டது. அதில், தவறு நடந்ததால் ஆசிரியர் தேர்வில் தாமதம் நிலவுகிறது.

தவறு செய்த 196 பேர் இனி எப்போதும் தேர்வு எழுத முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவுரவ விரிவுரையாளர்கள் 1146 பேரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், நீதிமன்றம் சென்று சிலர் தடையாணை பெற்றுள்ளனர்.

மாணவர்கள் நலன் கருதி அரசு எந்த முடிவு எடுத்தாலும், அதில் ஏதேனும் குளறுபடிகளை செய்து ஆசிரியர் நியமனத்துக்கு தடை செய்து கொண்டே இருக்கிறார்கள். மாணவர்கள் நலனுக்கான கவுரவ விரிவுரையாளர்களை அரசு நியமித்து மாணவர்களுக்கு தங்குதடையின்றி கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மிகையாக இருந்த ஆசிரியர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியரின் விகிதாச்சாரம் இணையாக உள்ளது.

இந்திய அளவில் உயர் கல்வி செல்வோர் 26.3 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் உயர் கல்வி செல்வோர் எண்ணிக்கை 49 சதவீதம் பெற்று இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. முனைவர் பட்டம், இள முனைவர் பட்டம் பயில்வோரின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.