தற்போதைய செய்திகள்

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை

அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பள்ளிக் கல்வித் துறையில் கடந்த மூன்றாண்டுகளில், இம்மாவட்டத்தில் 8 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், ஒரு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அம்மா தொடங்கி வைத்தார். வல்லரசு நாட்டில் கூட விலையில்லா மடிக்கணினி கொடுப்பது கிடையாது.

இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 89,760 நபர்களுக்கு 327 கோடி ரூபாய் செலவில் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணாக்கர்கள் விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காகவும், உலக அளவில் நம்முடைய மாணவர்கள் போட்டி போட்டு திறனை வளர்ப்பதற்காகவும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.

ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டிஐ,,மருத்துவக் கல்லூரி என ஏராளமான கல்லூரிகளை துவக்கி, பொருளாதாரத்தில் நலிந்தவர்களும் உயர்கல்வி கற்க வேண்டுமென்பதற்காக புதிய கல்லூரிகளை உருவாக்கியது அம்மாவின் அரசுதான்.

இந்த மாவட்டத்தில், ரிஷிவந்தியத்தில் இருபாலரும் படிக்கக்கூடிய அரசு மற்றும் கலைக் கல்லூரியை தொடங்கியுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2011-ல் அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபொழுது உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை 32 சதவீதம் தான். இன்றைக்கு அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் செய்த புரட்சி, மறுமலர்ச்சியின் விளைவாக நாட்டிலேயே, தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டியளித்தார்.