கன்னியாகுமரி

ரூ.44.82 கோடியில் தூண்டில்வளைவு அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் – என்.தளவாய்சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட மீனவ குடியிருப்புகளில் கடல்நீர் புகுவதை தடுக்க ஆழிக்கால், கோவளம், மேல்மிடலாம், பெரியநாயகி தெரு, இனயம் ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைத்திட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க ரூ.44.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது எனறு டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசினர் விருந்தினர் இல்லத்தில், அழிக்கால் பங்குத்தந்தையர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பங்கேற்றார்.

இக்கூட்டத்தின் போது கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட, அழிக்கால் பகுதியில், கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு, மணல் அரிப்பினால், ஊருக்குள் கடல்நீர் புகுந்துள்ளது. அதனை தொடர்ந்து, அப்பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், அஸ்விந்த் (வயது 26) என்பவர் மரணமடைந்து விட்டார். இதுகுறித்து, அப்பகுதியை சார்ந்த, பங்குத்தந்தை சோரிஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் இச்சம்பவம் குறித்தும், கடல் சீற்றத்தால் அப்பகுதியில் கடல் நீர் புகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்திடம்
தெரிவித்தனர்.

அப்போது டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், அங்கு வந்திருந்த பங்குத்தந்தை மற்றும் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:-

நாகர்கோவிலில் 22.09.2018 அன்று நடைபெற்ற, பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, அழிக்கால், கோவளம், பெரியநாயகி தெரு, மேல்மிடாலம், இனயம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களின் கோரிக்கையினை ஏற்று, மீனவ மக்களின் நலன் கருதி, தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி என அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மேற்குறிப்பிட்ட மீனவ பகுதிகளில், தூண்டில் வளைவு அமைப்பதற்கான ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சரிடம், மீனவ மக்களின் நலன் கருதி, அப்பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் நேரில் வலியுறுத்தினேன்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களின் கோரிக்கையை, கனிவுடன் பரிசீலித்து முதலமைச்சர் ஆணைக்கிணங்க, அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட, ரூ.9.38 கோடியும், கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.11.02 கோடியும், மேல்மிடாலம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.9.35 கோடியும், பெரியநாயகி தெரு பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.6.95 கோடியும், இனயம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.8.12 கோடியும் என ஆக மொத்தம் ரூ.44.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 07.04.2020 அன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா காலமாக உள்ளதால், பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு சிகிச்சை முடிந்தவுடன், இன்னும் ஒருசில வாரங்களுக்குள், அதற்கான டெண்டர் கோரப்பட்டு, உடனடியாக பணிகள் துவங்கப்படவுள்ளது.

மேலும், அப்பகுதி பங்குத்தந்தை மற்றும் ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இறந்த அஸ்விந்த் (வயது 26) என்பவரின் குடும்பத்திற்கு, குமரி மாவட்ட கழகம் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும். மேலும், இறந்தவரின் விவரங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, அரசின் நிவாரண தொகையும் பெற்று, அவர்களின் குடும்பத்திற்கு வழங்கிட, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.