தற்போதைய செய்திகள்

உள்ளரங்க விளையாட்டுகளுக்கு ரூ.17.47 கோடியில் பயிற்சி மையம்-துணை முதலமைச்சர் தகவல்

சென்னை

உள்ளரங்க விளையாட்டுகளுக்கு ரூ.17.47 கோடியில்மாநில அளவிலான பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாக பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021- 22-ம் ஆண்டக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

விளையாட்டு மற்றும் விளையாட்டு சார்ந்த நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. முதலமைச்சரால் தொடங்கப்பட்ட ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’, வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்38.85 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், 2021-22-ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்தவெளி அரங்கத்தினை கட்டுவதற்காக 9 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏலகிரியில் உள்விளையாட்டு அரங்கத்தை கட்டுவதற்காக 4.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கேரம், டேக்வோண்டோ, ஜூடோ, வாள்வீச்சு, பிரிட்ஜ் மற்றும் ஏனைய உள்ளரங்க விளையாட்டுகளுக்காக, மாநில அளவிலான பயிற்சி மையம் 17.47 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், பாரம்பரிய மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக 229.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.