தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

சென்னை

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021- 22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முன்னணியில் இருந்து பொறுப்புடன் செயலாற்றிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நோய்த்தொற்றின் ஆபத்தை பொருட்படுத்தாமல், தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், பலர் பணிக்கு திரும்பினர்.

இந்த ஆண்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மிகப்பெரிய பங்களிப்பு அரசு ஊழியர்களால், ஒரு குழுவாக வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களின் முயற்சிகளை மாநில அரசு தொடர்ந்து அங்கீகரித்து வருகின்றது.

தற்போது செயல்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அன்று நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் இத்திட்டம் நீட்டிக்கப்படும். தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டுத் தொகையான 4 லட்சம் ரூபாய் 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டுத் தொகை 7.5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு, மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான நடைமுறைகள் மேலும் ஒருங்கிணைக்கப்படும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.