24 ஆயிரம் ரேபிட் கிட் ரெடி: முதல்வர் தகவல்

 

சேலம்

24 ஆயிரம்  ரேபிட் டெஸ்ட் கிட்  தமிழகத்திற்கு வந்துவிட்டது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

24 ஆயிரம் ரேபிட் கிட் ரெடி

கேள்வி – தமிழகத்திற்கு என்றைக்கு ரேபிட்  டெஸ்ட் கிட் வரும்?

பதில் – இன்றைக்கு வந்துவிட்டது. 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கிடைக்கப் பெற்றது. நாம் பணம் செலுத்தியதற்கு வந்துவிட்டது. மத்திய அரசாங்கம் 12 ஆயிரம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். போதாது எங்களுக்கு 50 ஆயிரம் வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம். ஏற்கனவே விரைந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மாவுடைய அரசு முன்னெச்சரிக்கையாக சீனா நாட்டோடு தொடர்பு கொண்டு நாம் ஆர்டர் செய்திருந்தோம். 1 லட்சத்து 25 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கிடைக்க வேண்டும் என்று ஆர்டர் செய்திருந்தோம். அதற்குண்டான பணத்தை செலுத்தி இருந்தோம். ஆனால் காலதாமதம் ஆகிவிட்டது. இன்றைக்கு தான் 24 ஆயிரம் ரேபிட்  டெஸ்ட் கிட் வந்து சேர்ந்திருக்கிறது. எஞ்சியது விரைவாக சீனாவிலிருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னெச்சரிக்கையாக

கேள்வி – மத்திய அரசிடம் ரேபிட் டெஸ்ட் கிட் அதிகளவு கேட்டீர்கள். ஆனால் மத்திய அரசு குறைவாக தருகிறது. நிதி ஒதுக்கீடும் மத்திய அரசு குறைவாக செய்திருக்கிறது.

பதில் – மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மாநில அரசு ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் கொள்முதல் செய்வதற்கு ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தான் நமக்கு இப்பொழுது 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வந்திருக்கிறது. நாம் ஆணை பிறப்பித்தன் வழியாக நாம் கொள்முதல் செய்த 24 ஆயிரம் தான் இப்பொழுது உடனே வந்திருக்கிறது. மத்திய அரசு கொடுப்பது 12 ஆயிரம் தான் கொடுக்கிறது.

அதிகளவு வேண்டும்

அதிகப்படுத்தி கேட்டிருக்கிறோம். இன்றைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களிடம் நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்களும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்களும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். எங்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் அதிகமாக கொடுக்க வேண்டும். இன்னும் அதிகமான பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினாலே எங்களுக்கு அதிகளவு வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம். அவர் பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

பாரட்சம் பார்ப்பதற்கு இது நேரமில்லை

கேள்வி – மத்திய அரசு ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. பாரபட்சமாக பார்க்கிறீர்களா?

பதில் – பாரபட்சம் என்று பார்ப்பதற்கு சரியான நேரமல்ல. இன்றைக்கு யார் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசினுடைய கடமை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆகட்டும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆகட்டும், தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்று ஏற்பட்டால், முன்னின்று செயல்படுத்தி, சாதனை படைத்த அரசாக தான் இதுவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்திருக்கிறது. அது கஜா புயலாக இருந்தாலும் சரி, வர்தா புயலாக இருந்தாலும் சரி, சுனாமியாக இருந்தாலும் சரி, ஒக்கி புயலாக இருந்தாலும் சரி, தானே புயலாக இருந்தாலும் சரி, எந்த புயலாக இருந்தாலும், அந்த புயலை எதிர்கொண்டு, அந்த மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து, இன்றைக்கு தமிழகம் முதலிடத்திலே இருந்து கொண்டு இருக்கிறது.

தொடர் ஆய்வுப்பணிகள்

அதுபோல, நோய் தடுப்புப் பணியிலும் இன்றைக்கு முதன்மையாக தான் இருந்து கொண்டு இருக்கிறோம். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாகத் தான் நோய் தொற்று குறைக்கப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. யார் யாரெல்லாம் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டறிந்து, அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு குணமடைய செய்கின்ற பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைக்கு பலர் குணமடைந்து கொண்டிருக்கிறார்கள். சேலத்திலே கூட 24 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்

நேற்றைய தினம் தமிழகத்திலே 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய தினம் வரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்று வரை 1248 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், ஆனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆரம்ப காலக்கட்டத்திலேயே அவர்கள் மருத்துவமனையிலே சேர்ந்து, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால், விரைவாக குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். ஆனால் பலர் நோய் முற்றி, மருத்துவமனையில் சேர்க்கின்ற போது தான் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்றது. அதனால் குணமடைவதற்கு காலதாமதம் ஆகிறது.

அதனால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அரசு அறிவித்தபடி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர்களுக்கு அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைகளை அணுகி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்து கொண்டால், அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு தெரிவித்தார்.