தற்போதைய செய்திகள்

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்-ஆட்சியரிடம், என்.தளவாய்சுந்தரம் மனு

கன்னியாகுமரி, ஜூலை 8-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த்துக்கு
அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா மையமாக திகழ்கிறது.

மேலும் தினமும் கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன.

கடந்த 2 வருடங்களாக கொரொனா ஊரடங்கு காரணமாக இந்த சுற்றுலா தலங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழுகின்ற ஏராளமான மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஊரடங்கால் விடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள் மன அழுத்தம் காரணமாக மன மகிழ்ச்சிக்காகவும், ஆறுதலுக்காகவும்வெளியிடங்களுக்குச் செல்ல விரும்புகின்றனர்.

எனவே தமிழக அரசு பொது மக்களின் நலன் கருதியும், சுற்றுலா தொழிலை மீட்டெடுக்கும் விதமாகவும் சுற்றுலா தலங்களை திறந்து, கொரோனா பாதுகாப்புடன் மக்கள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்