தற்போதைய செய்திகள்

வெள்ளநீர் வடிகால் வலையமைப்பு திட்டத்திற்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு

சென்னை

வெள்ளநீர் வடிகால் வலையமைப்பு திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.287 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் நேற்று நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

2015-ம் ஆண்டிலிருந்து, மொத்தம் 3,831 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடையும்.

இத்திட்டத்தில் ஏற்பட்ட 32 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பில், சென்னையின் முக்கிய பகுதிகளில் விடுபட்டுப்போன மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைத்த காரணத்தால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்துதல் உட்பட 2 துணைத் திட்டங்களை கூடுதலாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கான ஒப்புதலை உடனடியாக அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம். முக்கியமான தொழில் வழித்தடங்களில், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 3 கட்டங்களில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 502 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக மொத்தம் 871.31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலத்தில் ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் வலையமைப்புத் திட்டம் நடப்பாண்டில் 3,220 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டில், 1,690.67 கோடி ரூபாய் செலவில் 3 மாநகராட்சிகள், 6 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 1,311 ஊரக வாழ்விடங்களில் 40.85 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றிற்கு 271 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும், 21 குடிநீர் வழங்கல் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

5 மாநகராட்சிகள், 22 நகராட்சிகள், 57 பேரூராட்சிகள் மற்றும் 12,346 ஊரக வாழ்விடங்களில் மொத்தம் 12,013.79 கோடி ரூபாய் செலவில், நாளொன்றிற்கு 1,223.35 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட 56 குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு, பல்வேறு நிலைகளில் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் 185.58 லட்சம் மக்கள் பயனடைவர். திருப்பத்தூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 2020-21-ம் ஆண்டில்,

5 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 285.87 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 2,391.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில், 19 பாதாள சாக்கடை கட்டும் திட்டப் பணிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.