தற்போதைய செய்திகள்

சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு

சென்னை

சட்டசபையில் நேற்று நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021- 22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

2011-12-ம் ஆண்டிலிருந்து தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 1,186 ஆண் குழந்தைகளுக்கும், 4,359 பெண் குழந்தைகளுக்கும் புதுவாழ்வு அளிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி, 24-ம் நாள் தற்போது மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மதிய சத்துணவுத் திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 43,246 மதிய சத்துணவுக் கூடங்கள் வாயிலாக 40.09 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,953.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 54,439 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6 மாதம் முதல் 6 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 33 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். வளர் இளம் பெண்களுக்கு அவர்களது ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க பல்வகை உணவு வழங்கப்பட்டு வருகிறது

2 வயது முதல் 5 வயது வரையிலான 11.33 லட்சம் குழந்தைகளுக்கு சூடான கலவை சாதம் வழங்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,634 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.