தற்போதைய செய்திகள்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்து, நாதிபாளையம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, புதிய மின்னணு குடும்ப அட்டை, வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடுகள், வீட்டுமனை பட்டாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், நான்கு வழி சாலை வசதிகள், மேம்பாலங்கள், அம்மா உணவகங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழை, எளியோருக்கு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக் கோழிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி தமிழ்நாட்டில் வீடற்றவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2,864 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் நாதிபாளையம் ஊராட்சி, பெரியார் நகரில் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் இப்பணிகள் முடிந்து நாதிபாளையம் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடற்றவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாபாளையம், குள்ளம்பாளையம் ஊராட்சிகளில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நாதிபாளையம் ஊராட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.