தற்போதைய செய்திகள்

காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி

காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியினை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம் ஊராட்சி யு.சப்பாணிப்பட்டி, மொட்டலூர் ஊராட்சி ராமாபுரம், கும்பாரஅள்ளி ஊராட்சி கீழ்கொள்ளுப்பட்டி ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் எ.கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

முதலமைச்சரின் ஆணைப்படி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அடிலம் ஊராட்சி சப்பாணிப்பட்டி, மொட்டலூர் ஊராட்சி ராமாபுரம், கும்பாரஅள்ளி ஊராட்சி கீழ்கொள்ளுப்பட்டி ஆகிய இடங்களில் ரூ.44 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடமும், ரூ.31 லட்சம் மதிப்பில் உணவு அருந்தும் கூடமும் ஆக மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்படும். மேலும் பெரியாம்பட்டி காமராஜர் நகரில் 190 மீட்டர் நீளத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கழிவுநீர்க்கால்வாய் கட்டும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அடிலம் ஊராட்சி சப்பாணிப்பட்டி, மொட்டலூர் ஊராட்சி ராமாபுரம், கும்பாரஅள்ளி ஊராட்சி கீழ்கொள்ளுப்பட்டி, பெரியாம்பட்டி, பந்தாரஅள்ளி ஊராட்சி தலகொண்டஅம்மன் கோவில், முருக்கம்பட்டி, ஜக்கசமுத்திரம் மற்றும் பேடரஅள்ளி ஆகிய 8 ஊராட்சிகளில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டுமானப்பணிகள் நடைபெற உள்ளது.

ரூ.44 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடமும், ரூ.31.00 லட்சம் மதிப்பில் உணவு அருந்தும் கூடமும் ஆக மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 9 பணிகள் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் 6 மாத காலத்தில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
முன்னதாக பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) தணிகாசலம், முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, மீனா, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹிம், உதவி திட்ட அலுவலர்கள்(மகளிர் திட்டம்) காமராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.