தற்போதைய செய்திகள்

குடிமங்கலத்தில் ரூ.3.04 கோடியில் புதிய திட்டப்பணி – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.3.04 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 8.8.2020 அன்று உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சி நஞ்சேகவுண்டன் புதூரில் ஜல் ஜீவன் விஷன் திட்டத்தின் கீழ் ரூ.104.44 லட்சம் மதிப்பீட்டில் அணிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட அணிக்கடவு,

நஞ்சேகவுண்டன்புதூர், ராமச்சந்திராபுரம், சிந்திலுப்பு, அணிக்கடவு புதூர், சி.நாகூர், கரியான்சாலை, கொங்காலி கவுண்டன்புதூர் ஆகிய கிராமத்தில் நிலத்தடி நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் குழாய் அமைக்கும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட  ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

மேலும் ரூ.64.64 லட்சம் மதிப்பீட்டில் வீதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வீதம்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி புதூர், பொம்ம நாயக்கன்பட்டி, வரதராஜபுரம் கிராமங்களில் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் குழாய் அமைக்கும் பணி, அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் அமைக்கும் பணி, ரூ.73.18 லட்சம் மதிப்பீட்டில் வாகத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட வாகத்தொழுவு, வி.வேலூர்,

ஜங்கமநாயக்கன்பாளையம், சலவநாயக்கன்பட்டி கிராமங்களில் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் குழாய் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் வாகத்தொழுவு ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாகத்தொழுவு ஊராட்சியில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி என குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.304.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, பெதப்பம்பட்டி குடிமங்கல ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ் 86 பயனாளிகளுக்கு தலா ரூ.22,899 மதிப்பில் ரூ.19,69,314 மதிப்பீட்டில் புல் அறுக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.