தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டம்

திருவண்ணாமலை

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது. உயிரை கொடுத்து உழைக்கின்ற தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் கழகம். கழகத்தை அழிக்க யாராலும் முடியாது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

கழகத்தின் 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் 58ம் ஆண்டு தொடக்க விழா திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், தலைமைக் கழக பேச்சாளருமான எம்.ஜி.ஆர். பித்தன் அ.கலீல் பாட்சா, வரவேற்றார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காஞ்சி பன்னீர்செல்வம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருஉருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினர்.

அதனைத்தொடர்ந்து பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.பாகம் 2 புத்தகம் சிறப்பு மலரினை கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட அதனை முன்னாள் அமைச்சர் சிபொன்னையன், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசியதாவது:-

ஐம்பதாவது ஆண்டு முடிவுற்று 51ம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. 1972ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் குடும்ப அரசியலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கம் துவங்கப்பட்டதற்கு பின்னாலே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட சோதனைகள் ஏராளம்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார். எவ்வளவு துன்பப்பட்டார் என்பது என்னை விட பெரியவர்களான மேடையில் அமர்ந்திருக்கின்ற கழக அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்களுக்கு தான் தெரியும். அவர்களுக்கு தான் கழகம் சந்தித்த சவால்கள் சோதனைகள் தெரியும். அதனை அனைத்தையும் முறியடித்து உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்ற பேரியக்கம்.

இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. ஸ்டாலின் இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார். கழக நிர்வாகிகள் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு கழகத்தை அழித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் நினைப்பது ஒருபோதும் நடக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உங்களை போன்ற தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம்.

லட்சோப லட்ச தொண்டர்கள் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. இந்த இயக்கத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது.

இந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவனுக்கு என்று ஒரு சரித்திரம் இருக்கிறது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னது போல எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார்களே. அந்த வாக்குக்கு ஏற்ப அஇஅதிமுக எடப்பாடியார் தலைமையில் வலிமையான இயக்கமாக ஒன்றுபட்ட இயக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பிரகடனம் செய்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார். தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வென்றெடுக்கும் என்று பொதுக்கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் இந்த இயக்கத்தில் இருக்கின்ற அடிமட்ட தொண்டர்கள்.

எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இந்த இயக்கம் எங்களின் உயிர் மூச்சு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களை போன்ற தொண்டர்களின் இதயத்தில் இருக்கின்ற காரணத்தினால் தான் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு வலிமையான இயக்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை, கருணாநிதி தூக்கி எறிந்த போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், தமிழக மக்களை நம்பினார். தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளியோர், வலியவர்கள் உழைப்பாளர்களை நம்பினார். அதன் காரணமாக அதிமுக உருவாக்கப்பட்டு இயக்கம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்ற நேரத்தில் 33 ஆண்டுகாலம் ஆளுங்கட்சியாக இருந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.

இந்த இயக்கம் யாருக்கும் சலித்த இயக்கமல்ல, எந்த விதமான எதிர்ப்புகளையும் எதிர்த்து இன்று பரிணாமம் பெற்று இருக்கிறது. எம்.ஜி.ஆர் மன்றம் இதற்கெல்லாம் ஒரு ஆணிவேராக இருக்கின்றது. 1972ம் ஆண்டு இந்த இயக்கத்தை தொடங்கியபோது எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் தொண்டர்கள் சந்தித்த போது இந்த மன்றத்தை என்ன செய்வது என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் இடம் கேட்ட பொழுது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சொன்னார்கள். எம்.ஜி.ஆர் மன்றம் பின்னாலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கிளை கழகம் என்று எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னார். இந்த இயக்கத்துடைய விதையாக ஆணி வேராக எம்.ஜி.ஆர் மன்றம் திகழ்கிறது.

எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்தாலும் கூட வழக்குகளில் வெற்றிபெற்று நிரந்தர பொதுச்செயலாளராக பதவி ஏற்பார். அவரது தலைமையின் கீழ் இந்த இயக்கத்தில் பணியாற்றி கொண்டிருக்கின்ற, உயிரை கொடுத்து உழைக்கின்ற உங்களைப்போன்ற தொண்டர்கள் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.