தற்போதைய செய்திகள்

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

துத்துக்குடி

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 4 பேர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆறுதல் கூறியதோடு, ரூ.25,000 ஐ உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்களுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன், அவரது ஒரு மகன், 2 மகள்கள் என 4 நபர்கள் கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உறவினர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மரணமடைந்தவர்களின் உருவபடங்களுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து, மரணமடைந்த கண்ணனின் சித்தப்பா மோகனிடம் ரூ25,000 நிதி உதவியை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான பி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தோட்ட பணியாளர்களாக நமது தூத்துக்குடி மாவட்டத்ததை சேர்ந்த பணியாளர்கள் ஏராளமானோர் அங்கே தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். மூணாறுக்கு அருகே உள்ள ராஜமலை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 6ம் தேதி இரவு ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக நமது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்களின் உறவினர்கள் 90 சதவீதம் பேர். நெல்லை மாவட்டத்தில் 10 சதவீதம் பேரும் அங்கே பணியாற்றி பலியானார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உடனடியாக கேரள மாநில முதலமைச்சரோடு தொடர்பு கொண்டு அந்த விபத்தில் பலியான அத்தனை பேரின் உடல்களையும் விரைந்து மீட்க வேண்டும், அதே போல் எஞ்சியவர்களை காப்பாற்றும் முயற்சியில் கேரள அரசு வேகமாக ஈடுபட வேண்டும் எனவும், அதிலே காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசின் மூலமாக எந்த உதவி கேட்டாலும் நாங்கள் செய்ய தயார் நிலையில் இருக்கின்றோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேரள முதலமைச்சரோடு பேசி அதன்பிறகு மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று இன்று காலை வரை 49 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிலே கயத்தாறு பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 24 பேர் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கே ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சார்ந்த கண்ணன் அவரது குழந்தைகள் நதியா, விஷ்ணு, விஜயலட்சுமி உள்ளிட்ட 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவரது மனைவி சீத்தாலட்சுமி அவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிலே அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, அங்கு நடைபெறும் மீட்பு பணிகளின் அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களுக்கு உதவும் வகையில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் உதவி இயக்குநர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து அங்கே உள்ள நிலைமைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு, அரசுக்கும் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையிலே கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான என்னை உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள கயத்தார் பாரதிநகர் மக்களை நேரடியாக சென்று ஆறுதல் தெரிவிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுத்தினார். அந்த வகையிலே நானும், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்றைய தினம் நேரில் சென்று மரணமடைந்த குடும்பத்தினரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

மேலும் முழு தகவலும் கிடைத்த பிறகு இன்று அல்லது நாளை அந்த விபத்தில் பலியானவர்கள் உடல்கள் கிடைக்கப்பட்ட பிறகு அதிலே எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனை பேர் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றார்கள், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் ஆனாலும் சரி, அதேபோல் பிள்ளைகளை இழந்த முதியவர்கள் ஆனாலும் சரி, அப்படிப்பட்ட நிலையில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்ற முழு விபரம் அறிந்தவுடன் அந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு எடுத்து சென்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கும் கேரளாவில் இருந்து திரும்பி வந்து இங்கேயே தங்க வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு குடியிருப்பு வசதி போன்ற அத்தனை அடிப்படை வசதிகள், கல்வி பயில்கின்ற நிலையில் இருக்கின்ற குழந்தைகள் இருந்தால் அவர்கள் கல்விக்காகவும், படித்துவிபட்டு வேலைக்கு செல்லும் நிலையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்க ஆவணம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தபுரம் பகுதியில் கண்ணன் மற்றும் அவரது குழந்தைகள் என 4 பேர் பலியாகிவிட்டார்கள். அதில் சீத்தாலட்சுமி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். அந்த உறவினர்கள் எல்லாம் அங்கே சென்று அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்ற சீத்தாலட்சுமி என்பவரை பார்க்க வேண்டும்.

மருத்துவமனையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு எல்லாம் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற நிலையிலே அங்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு ரூ.25,000 சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. முறைப்படி அவர்களுக்கு இ-பாஸ் அனுமதி பெற்று வழங்கி அவர்கள் சென்று வருவதற்கு நிச்சயமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

கயத்தாறு பாரதிநகர் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு 4 குடும்பங்களுக்கு தலா ரூ.50,000-ம், 6 குடும்பங்களுக்கு தலா ரூ.25,000-ம் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அறநிலையத்துறை தலைவருமான பி.மோகன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், தேவராஜ், ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எலிசபெத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கெலன்பொன்மணி, வளர்மதி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் கோபி (எ) வீரபாண்டி, கிழக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஸ்டீபன், கடம்பூர் அம்மா பேரவை செயலாளர் மோகன், முன்னாள் மாவட்ட ஆவின்பால் இயக்குநர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், சவுரிமுத்துசாமி, சுடலைமணி, கணேசன், ராஜாகனி, மகாராஜன், முருகராஜ், அன்புராஜ், மணிகண்டன், சீனி, பரமசிவம் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.