தமிழகம்

14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு

சென்னை

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர், ராஜன் நகர் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் புவனேஷ்குமார் பரிசல்துறை என்ற இடத்தில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,சத்தியமங்கலம் வட்டம், இக்கரைநெகமம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்பவரின் மகன் லோகேஸ்வரன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் வட்டம்,

காந்தலூர் கிராமத்தில், மலைப்பள்ளம் நீரில் குளிக்கச் சென்ற சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரின் மகன் தமீம் அன்சாரி, மற்றும் சிவகுமார் என்பவரின் மகள் ஏஞ்சல் ஆகிய இரண்டு பேரும் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் சுப்ரமணியன் தலையில் மரம் முறிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,


கரூர் மாவட்டம், தொண்டமாங்கினம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் சந்தியா கிணற்று படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பள்ளிமடம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் அழகு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவரின் மகன் நித்திஸ் கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில், திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கண்ணன் தேங்கியிருந்த நீரில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் மற்றும் ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பெரியமுல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த கனகசபாபதி என்பவரின் மகன் வேலு எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், மாங்குளம் கிராமத்தில், வைக்கோல் சுருட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சீராளன் என்பவரின் மகன் நாகப்பன் என்பவர் வைக்கோல் சுருட்டும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.