சிறப்பு செய்திகள்

நாகை,மயிலாடுதுறையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஆய்வு செய்தார். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட அவர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசித்தார். அங்கு முதலமைச்சரை பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்கு தந்தையர்கள் வரவேற்றனர். இதையடுத்து நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் புயலால் சேதமடைந்த தர்ஹாகுளத்தை பார்வையிட்டார்.

அங்கு முதலமைச்சருக்கு துவா ஓதப்பட்டது. மேலும் நகரா என்கிற மங்கள வாத்தியம் முழங்க முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட கள்ளிமேடு பகுதியில் மழையால் பாதித்த 452 ஏக்கர் விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்பின்னர் மழையால் பாதிக்கப்பட்டு தலைஞாயிறு ஒன்றியம் பழங்கள்ளிமேடு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். மேலும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தரமான உணவு தயாரிக்கும் ஆய்வுகூடத்தை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை வட்டம் செம்பனார் கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாடை ஊராட்சி பகுதியில் மழையால் பாதித்த 7 ஏக்கர் விளைநிலங்களை பார்வையிட்டார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மொழையூர் கிராமத்தில் மழையால் பாதித்த விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சி லயன்ஸ் திருமண மஹாலில் மழையால் பாதித்து தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் நிவாரண பொருட்களை வழங்கினார். அங்குள்ள உணவு கூடத்தையும் பார்வையிட்டு உணவு தரமாக இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் அரசு தொழில்நுட்பகல்லூரி எதிரில் வேளாண்மைத்துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி தங்களுக்கு தமிழக அரசின் உரிய நிவாரணம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கழக அமைப்பு செயலாளர் எஸ்.ஆசைமணி, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ், வி.ராதாகிருஷ்ணன், பி.வி.பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.