தற்போதைய செய்திகள்

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்று கரை திரும்பாத மீனவர்களை பாதுகாப்பாக மீட்க அரசு நடவடிக்கை – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்று கரை திரும்பாத மீனவர்களை பாதுகாப்பாக மீட்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த 23.07.2020 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இம் மீனவர்கள் 07.08.2020 அன்று கரை திரும்பியிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 28.07.2020 அன்று ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினம் கடற்கரையின் கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்படகு மற்றும் அதில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும் தொடர்புகொள்ள இயலவில்லையென அப்படகின் உரிமையாளர் மற்றும் மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்து, காணாமல் போன படகு மற்றும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரினர்.

இதனைத்தொடர்ந்து காணாமல் போன படகுடன் சேர்ந்து மீன்பிடிக்கச் சென்ற படகிலுள்ள மீனவர்களை, மீன்துறையினர் செயற்கைக் கோள் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு காணாமல் போன படகின் விவரம் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் தேடுதல் பணிகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், சென்னை மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளைக் கொண்டும் காணமால் போன மீனவர்களை மீட்பதற்கு மீன்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் சென்னை மீன்பிடித் துறைமுக மேலாண்மைப் பிரிவு மீன்துறை உதவி இயக்குநர் மூலம் காணாமல் போன மீனவர்களை வான்வழி மற்றும் கடல் வழியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை கடலோர காவற் படையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, கடலோர காவல் படை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகினை தேடும் பணி நடைபெற்றுவருகிறது. காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகினைக் கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டிட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.