தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

முதலமைச்சரின் உதவி மையத்துக்கு இதுவரை 9.38 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாகவும், இதில் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

பொதுமக்களின் குறைதீர்க்கும் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தில் உதவி எண் -1100க்கு சுமார் 9,38,773 அழைப்புகள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்று 1.50 லட்சம் பேரின் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 13.02.2021 அன்று பொதுமக்களுக்காக முதலமைச்சர் உதவி அழைப்பு மையம் (CM Helpline) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதன்படி சென்னை ராஜீவ்காந்தி சாலையில் இயங்கி வரும் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்று அதன் செயல்பாடுகளை நேரடி ஆய்வு செய்தார்.

பின்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் குறைதீர்ப்பு உதவி அழைப்பு மையம் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் ரூ.69.21 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு, முதற்கட்டமாக ரூ.12.78 கோடி மதிப்பில் 150 இருக்கைகள் கொண்ட உதவி மையம் உருவாக்கப்பட்டு பின்னர் தேவைக்கேற்ப தொலைநோக்கு பார்வையுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் தொடர்பான கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைக்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 9,38,773 அழைப்புகள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்று ரூ.1.50 லட்சம் அழைப்புகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக அரசிடம் கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம். மக்கள் தங்கள் குறைகளை எந்த சூழ்நிலையிலும் பதிவு செய்யலாம்.

தாங்கள் அளித்த புகாரின் நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். புகார் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் தெளிவுபடுத்திக் கொள்ள வழிவகை உள்ளது. புகார் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களும் கருத்துக்கள் கூறலாம்.

முதலமைச்சரின் மக்கள் குறை தீர்ப்பு திட்டத்தை எளிய முறையில் அணுகும் விதமாக இக்குறைகளை பல்வேறு தளங்களில் தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1100 என்ற உதவி எண் மூலமாகவோ, cmhelpline@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது IIPGCMS என்ற செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். மக்களின் குறைகள் சம்பந்தப்பட்ட துறையை சென்றடையும்.

இந்த குறைதீர்க்கும் முகாம், இணையதளம், சமூக ஊடகங்கள், கைப்பேசி செயலி (MobileApp) மின்னஞ்சல் மற்றும் நேரிடையாக பெறப்படும் மனுக்கள் மீது இத்திட்டத்தின் வாயிலாக காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாள் தோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வாயிலாகவும் 24 மணிநேரமும் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தின் பொது மக்களின் குறைகளை விரைந்து களைந்திட அவர்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் போன்ற தகவல்களை அவசியம் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு கோரும் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு பெற்றிட வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக மனுதார்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் முன்பு அளிக்கப்பட்ட குறையின் நிலையை தெரிந்து கொள்ள விரும்பினால், உதவி எண்ணை அழைக்கலாம்.

பொதுமக்களின் குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முதல்வர், தலைமைச் செயலர் அனைத்து அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் உரிய மாவட்ட ஆட்சியர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் சிறப்பு அலுவலர் கே.கந்தசாமி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.