தமிழகம்

கழகத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு-முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றி

சென்னை

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வெற்றிக் கூட்டணியான கழக கூட்டணிக்கு நாள்தோறும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்திய சுவிசேஷ திருப்சபையின் பிரதம பேராயர் எஸ்றா சற்குனத்தின் மகளும், தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகளை கொண்ட மாபெரும் பேராயமாக இயங்கி வரும் இ.எஸ்.ஐ. கிறிஸ்தவ திருச்சபையின் நிரந்தர நிர்வாக பேராய பொறுப்பு வகித்து வரும் டாக்டர் கதிரொளி மாணிக்கம் தலைமையில் 5 பேராயர்கள் உள்பட 50 ஆயர்கள் கடந்த 6-ந்தேதி கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை சந்தித்து கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், இந்திய தேசிய குடியரசு கட்சி,

வீர முத்திரையர் முன்னேற்ற கழகம், தமிழ் தெலுங்கு தேசிய கட்சி நிர்வாகிகள் தலைமை கழகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த 50 பேர் நேரில் சந்தித்து கழகத்திற்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.

நாகூர் தர்கா டிரஸ்டி செய்யது யூசுப் சாஹிப் காதிரி, அகில இந்திய சுன்னத்துல் ஜமாத் சுல்தான் கலிபா காதிரி, சாஹிப்பர் மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஜான் செய்யது மீரான் சாஹிப் காதிரி, நவாப் வாலாஜா பள்ளி கூட்டமைப்பு முத்தவல்லி ஹாஜா நஜ்முதீன் முகலி, தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் செய்யது முஹம்மது கலிபா சாஹிப், னூரே ஜமாலியா கூட்டமைப்பு னவாஜ் முஹம்மது ஹக், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் செய்யது மீரான், ஹஸ்வத் நீலம் பாஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் டாக்டர் குலாப் அலிஷா முத்தவல்லி, முஸ்லிம் சாரிட்டபிள் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் பி. அன்வர்பாஷா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 50 பேர் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான க.பாண்டியராஜன் உடன் இருந்தார்.