தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் 17-ம்தேதி முதல் துவங்கும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை,

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் 17-ம்தேதி முதல் துவங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை ஒரு பேரிடராக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாவின் அரசு வருமுன் காப்போம் என்ற முதுமொழிக்கு ஏற்ப பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ,மாணவியர் சேர்க்கை குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. 2020-21 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அனைத்து வகை பள்ளிகளில் 1-ம் வகுப்பு 6-ம்வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புகளில் வரும் 17-ம்தேதி அன்று முதல் நடைபெறும். சமூக இடைவெளி பின்பற்றுவது சார்ந்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசின் வழிகாட்டுதல் மாணவர் சேர்க்கையின்போது தவறாது பின்பற்றப்படவேண்டும். ஒரு பள்ளியிலிருந்து வேறோரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாகப் பிற வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் வரும் 17-ம்தேதி அன்று முதல் நடைபெறும்.

அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் மேல் நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 24-ம்தேதி முதல் நடைபெறும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உரியப் பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புமுறைகளைப் பின்பற்றி வழங்கப்படும்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை செய்ய இணையதளத்தின் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பம் செய்ய மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்..

அதைத்தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து, கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றார்.