தற்போதைய செய்திகள்

400 நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைத்து முதல்வர் சாதனை – அமைச்சர் செல்லுார் கே.ராஜூ பெருமிதம்

சென்னை

தமிழகத்தில் 400 நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைத்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சாதனை படைத்துள்ளார் என்று அமைச்சர் செல்லுார் கே.ராஜூ பெருமிதத்துடன் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் உள்ள 4500 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி மற்றும் சேவை குறித்து ஆலோசனை கூட்டம், நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் கே.ராஜூ முன்னிலை வகித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதல்வராக அம்மா பொறுப்பேற்ற பின்னர் தான் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் மாவட்ட வங்கிகளும் கணினிமயமாக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் காரணமாக 5700 கூட்டுறவு சங்கங்களும் வங்கிகளும் கணினியமயமாக்கப்பட்டு வணிக வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத்துறையில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை 96 லட்சத்து 58 ஆயிரத்து 641 பேருக்கு ரூ 57 ஆயிரத்து 700 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 11 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9, 350 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் மும்மாரி மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 32 ஆயிரத்து 970 கூட்டுறவு நியாயவிலைக்கடைகளின் மூலம் கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 98 சதவீதம் அளவுக்கு தலா ரூ.1000 வழங்கி வருகிறோம். இப்போது முகக்கவசங்களை வழங்கி வருகிறோம். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்.

ஒவ்வொரு நாளும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதும் அதன் விபரங்கள் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஆக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் எவ்வளவு என்பது குறித்த அறிக்கை எனக்கு வந்து சேரும். இதில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை.சென்னையில் ரேஷன்கடைகளுக்கு யாரும் இடம் தர மறுக்கிறார்கள்.தற்போது 400 நடமாடும் ரேஷன்கடைகள் அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு பணி அதிகாரி ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், அந்தோணி சாமி ஜான் பீட்டர், ரவிக்குமார் ஆர்.ஜி.சக்தி சரவணன், பிருந்தா முருகன் நபார்டு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.