தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி தான் வெற்றி பெறும்-முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

வரும் சட்டமன்ற தேர்தலில் கழக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தலைமை கழகத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. இது மாநிலத்திற்கு நடைபெறும் தேர்தல். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை எங்கள் கூட்டணிபெற்றது.

அதே வெற்றி நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் கிடைக்கும். ஊடகங்களும், பத்திரிகைகளும் கருத்து கணிப்பை வெளியீடுகிறீர்கள். நீங்கள் தான் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

எங்கள் கருத்தை பொறுத்தவரையில் கழக கூட்டணி மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றுள்ளது. கடந்த 4, 5 ஆண்டு காலமாக நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். புரட்சித்தலைவி முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை கழக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றி நாட்டு மக்களிடம் மனதில் இடம்பெற்றுள்ளோம்.

மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தில் தான் திமுக வெற்றி பெற்ற விக்கிரவாண்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதுபோல நாங்குநேரியில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.

எனவே மக்கள் கழக அரசு தான் வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். கழகம் மற்றும் அதன் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு இடைத்தேர்தல் மூலமாக தெளிவுப்படுத்தி விட்டார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.