தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை

எடப்பாடியார் முதலமைச்சராக திருமங்கலம் தொகுதி முதல் வெற்றியை ஈட்டித்தரும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக நாம் செய்த மக்கள் சேவைக்கு மதிப்பெண் வரும் நாள் தான் தேர்தலாகும். 49 ஆண்டுகளாக இந்த இயக்கத்தின் ஆணிவேரான நீங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவதால் திருமங்கலம் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 23,950 வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெற வைத்தீர்கள். அதற்கு பரிசாக அம்மா அவர்கள் அமைச்சர் பதவி வழங்கினார்.

இன்றைக்கு தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சர் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக நடத்துகிறார் என்பதே காரணம்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் நம் மீது பழி சுமத்தி சேற்றை வாரி இறைக்கின்றனர். தனக்கு பின் தனது வாரிசு அரசியல் செய்ய வேண்டும் என்று செய்ய முடியாததை சொல்கிறார்கள். ஆனால் சொன்னபடி செய்துள்ளார்களா ?

இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றனர். திருமங்கலம் பகுதியில் எத்தனை பேருக்கு இரண்டு ஏக்கர் நிலம் தந்தார்கள் என்று மக்கள் நீங்கள் தான் கேட்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நகை கடன் தள்ளுபடி என்று பொய் சொல்லி நாடகமாடி வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் சொன்னதை செய்யவில்லை. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தான் ரத்து செய்துள்ளார்.

முதலமைச்சரின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து இல்லத்தரசிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் முதலமைச்சர் அனைத்து இல்லத்தரசிகளும் வளமுடன் வாழ வேண்டுமென்று 1500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்டம் செய்தனர். ஆனால் இன்றைக்கு விலையில்லாமல் சிலிண்டர் தருகிறேன் என்று முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தன. ஆனால் இதற்கு முதலமைச்சர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இதன்மூலம் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க செய்து தீர்வு கண்டார். தற்போது இந்த ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்கும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்

திருமங்கலம் தொகுதியில் புதிய கோட்டத்தை முதலமைச்சர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். நாம் கோட்டையில் இருந்தால்தான் கோட்டத்தை உருவாக்க முடியும்.

அதேபோல் திருமங்கலம் தொகுதியில் தென்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக 33 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு அதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

திருமங்கலம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு சாலை வசதி, சுற்றுச்சுவர் ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி திமுக அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் செய்த சேவை என்னவென்றால் நில அபகரிப்பு, புதிதாக சொத்து வாங்குபவர்களை மிரட்டி பணம் பறிப்பது தான். அம்மா இல்லாத தேர்தலில் நாம் சந்திக்க உள்ளோம். எதையும் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். திருமங்கலம் தொகுதியில் 402 புத்துகள் உள்ளன.

நிர்வாகிகள் வீடு வீடாக கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும். தி.மு.க.வினர் கோரப்பசியில் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்க வந்தால் தமிழகத்தை சின்னா பின்னமாக்கி விடுவார்கள்.

எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து கழகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார். அதற்கு திருமங்கலம் தொகுதி முதல் வெற்றியை தேடித்தரும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.