தற்போதைய செய்திகள்

உதயநிதியின் குடும்பமே ” பிளேபாய்” குடும்பம்தான் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை

உதயநிதியின் குடும்பமே பிளேபாய் குடும்பம்தான் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து துரிதமான முறையில் செயல்பட்டதாலும், மக்களின் ஒத்துழைழைப்பாலும், படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருகிறது. ராயபுரத்தில் மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதமாக ஆக இருந்த நோய் தாக்கம் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் நலன் கருதி, கட்சி எடுக்கக்கூடிய முடிவு.வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு முடிவெடுக்கும். தனிப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலேயே கூட்டணி உருவாகும் என்று வி.பி துரைசாமி கருத்து தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு கூட்டணி குறித்து பாரதீய ஜனதா தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறினால் உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும்.

கூட்டணி பற்றி தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். அதிமுக என்ற ஆலமரம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த மரம் அழியாது. எங்கள் கட்சியில் எந்த பிளவும் இல்லை. பெவிக்கால் போட்டு ஒட்டியது போல கட்சி உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி இருக்கும். இந்த கட்சியை உடைக்க முடியாது, பிரிக்கவும் முடியாது.

உதயநிதி ஸ்டாலினின் பிளேபாய் கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நான் உதயநிதி ஸ்டாலினை “ஸ்வீட்பாய்” என்ற அர்த்தத்தில் “சாக்லேட் பாய்” எனக் கூறினேன். அதற்கு அவர் என்னை “பிளேபாய்” என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். அப்படிப் பார்த்தால் “அவர்கள் குடும்பமே பிளேபாய்” குடும்பம்தான். நடிகர் எஸ்வி சேகர், சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் சிறைக்கு செல்லும் அவரின் ஆசையை கழக அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.