தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் உத்தரவின் படி திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

முதலமைச்சர் உத்தரவின் படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட அமராவதி அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள விவசாய வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று குடிநீர் மற்றும் பாசன பகுதியில் நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் கடந்த 6.8.2020 அன்று முதல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், தற்போது அமராவதி அணையினை சுற்றியுள்ள கேரளா மாநிலத்தில் அதிகளவு மழை பெய்து வருவதால் தற்போது அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியிலிருந்து சுமார் 86.03 அடி தண்ணீர் உள்ளது. மேலும், சுமார் 2000 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இவற்றில் 1440 கனஅடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். மேலும், முதலமைச்சரின் உத்தரவின் படி, நமது மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.