சிறப்பு செய்திகள்

கூட்டணியை விட்டு வெளியேறியவர்கள் பழி சுமத்துவது தவறு – முதலமைச்சர் பேட்டி

சேலம்

கூட்டணியை விட்டு வெளியேறியவர்கள் பழி சுமத்துவது தவறு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., இன்றைக்கு புதிய தமிழகம் வெளியேறியுள்ளனர் அது குறித்து…?

பதில்:- புதிய தமிழகம் எங்களுடன் கூட்டணியில் இல்லை. அவர்கள் ஏற்கனவே முறித்து விட்டு சென்று விட்டனர்.

கேள்வி:- தே.மு.தி.க. விலகியது அ.தி.மு.க.விற்கு இழப்பா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறதே அது குறித்து?

பதில்:- அவர்கள் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகள் என்று தான் கருதுகிறேன். கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகிற சம்பவம். வெளியேறியவுடன் இப்படி நினைத்தவாறு என்று பேசுவது சரியல்ல. அது கூட்டணிக்கும் அழகு அல்ல. கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக சென்று நிற்பதில் தவறு இல்லை. ஆனால், ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு.

கேள்வி:- பா.ம.க.விற்கு கொடுத்த மரியாதை தே.மு.தி.க.வுக்கு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே, அது குறித்து?

பதில்:- நானே பேசினேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. வாக்கு வங்கி என்று ஒன்று உள்ளது. நீங்களே என்ன செய்கிறீர்கள், இவருக்கு 40 சதவீதம் , இவருக்கு 36 சதவீதம், இவருக்கு 7 சதவீதம் என நீங்களே பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஏற்றார் போலத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.