தற்போதைய செய்திகள்

2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை திமுக இழக்கும் – ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு

ராமநாதபுரம்

ஸ்டாலின் ஆசை கடைசி வரை கனவாகவே முடிந்து விடும். 2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க இழக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நிர்வாகிகள் தேர்விற்கான கூட்டம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் ஏ.சரவணகுமார் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் துணைசெயலாளர்கள் நாகராஜன், துரை வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரின் அருளாசியால் கழகம் வீறுநடை போடுகிறது. நமது முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் சாதுர்ய திறமையால் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடித்து ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். ஸ்டாலின் நூலறுந்த பட்டம் போல் முதல்வர் கனவில் மிதக்கிறார். அவரது ஆசை கடைசி வரை கனவாகவே முடிந்து விடும்.

நல்ல எண்ணங்களும், நற்சிந்தனைகளும் இருந்தால் மட்டுமே நல்ல மனிதனாக வாழ முடியும். திமுக தலைவர் ஸ்டாலினிடம் துளி அளவுகூட நல்ல எண்ணங்கள் கிடையாது. வரும் 2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியையும் திமுக இழந்து நிற்கும். மதிநுட்பம் கொண்ட படித்த இளைஞர்கள் கழகத்தின் தொழில்நுட்ப பிரிவில் இணைய வேண்டும். இளைஞர்கள் அனைவருக்கும் நமது இயக்கமும், மாவட்ட கழகமும் துணை நிற்கும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்த நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.