தற்போதைய செய்திகள்

21,77,868 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 2,85,130 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 21,77,868 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி ெதரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி மற்றும் குடியானகுப்பம் கற்பகம் நியாயவிலை கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்து முகக் கவசங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாத்திட முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொற்று பரவுவதை கட்டுப்படுத்திட தொடர் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாதிப்புகளை கட்டுப்படுத்தி மக்களை காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இருக்க நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்.

அண்டை மாநிலங்களை காட்டிலும் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச்சிறப்பாக செயல்படுகின்றது என்று தமிழ்நாடு பாராட்டை பெற்று செயலாற்றி வருகின்றது. ஊரடங்கு நாட்களில் வேலையில்லாமல் மக்கள் பாதிக்காத வகையில் கடந்த நான்கு மாதமாக ரேஷன் பொருட்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் இலவசமாக ஏழை எளிய மக்கள் உணவருந்த வழிவகைகளை முதலமைச்சர் ஏற்படுத்தி கொடுத்தார். மேலும் குடும்ப வருமானத்திற்காக சுய தொழில் செய்ய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை இந்த ஊரடங்கு காலத்திலும் வழங்கி வருகின்றார்கள். புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளை அதிக அளவு ஏற்படுத்தி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றார்கள். அதிகப்படியான மருத்துவ பரிசோதனை மையங்கள் மற்றும் மக்களுக்கு பரிசோதனைகளை செய்யும் மாநிலங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது தரமான முகக் கவசங்களை அணிந்திட தலா இரண்டு முக்கவசங்களை வழங்கி முதலமைச்சர் துவக்கி வைத்தார். அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 2,85,130 குடும்ப அட்டைதாரார்களுக்கு மொத்தம் 21,77,868 முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது. நோய் பரவுவதை தடுத்திட மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருந்து அரசு தெரிவிக்கும் நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, துணைப்பதிவாளர் முனிராஜி, நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், ஜோலார்பேட்டை சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ஆர்.ரமேஷ், கே.சி.அழகிரி, செல்வம், கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன், வட்டாட்சியர் மோகன் மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர் தேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.