சிறப்பு செய்திகள்

விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அரசு ஏற்காது – முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புரெவி புயல் மற்றும் கனமழையால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: On-line வர்த்தகத்தை ஆதரிக்கிறீர்களா?

பதில்: விவசாயிகளுக்கு நன்மை என்று சொன்னால், நீங்கள் On-line வேண்டாம் என்கிறீர்களா? விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சொல்கிறோம், எந்த விதத்தில் செய்தாலும், விவசாயிகள் நன்மை பெறவேண்டும். அது எங்களுடைய குறிக்கோள். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை அவர்கள் நல்ல விலைக்கு விற்க வேண்டும், லாபகரமாக அந்தத் தொழில் நடக்க வேண்டுமென்பதுதான் கு அம்மாவினுடைய அரசினுடைய விருப்பம், அதைத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு, இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கொண்டுசென்று விற்றுக் கொள்ளலாம். இது மிகவும் வரவேற்கத்தக்கதல்லவா? இது விவசாயிகளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் அல்லவா? ஆக, எதை வரவேற்கவேண்டுமோ அதை வரவேற்க வேண்டும்.

நாங்கள், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்தோம். காவேரி நதிநீர் பிரச்சனைக்காக தொடர்ந்து நாங்கள் நாடாளுமன்றமே முடங்குகின்ற அளவிற்கு குரல் கொடுத்தோம். இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விவசாயிகள் பாதிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் அம்மாவின் அரசு எதிர்க்கும். விவசாயிகள் லாபம் பெறக்கூடிய எந்தத் திட்டத்தையும் எங்களுடைய அரசு ஆதரிக்கும். அந்தக் கொள்கையில்தான் நாங்கள் இருக்கிறோம். இப்போதும் அதன்படி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல. பஞ்சாபில் ஒரு பொருளை விற்கவேண்டுமென்றால் ஏஜென்ட் மூலமாகத்தான் விற்க முடியும். அந்த ஏஜன்ட்-க்கு, வியாபாரி, கமிஷனாக 2.5 சதவீதம் கொடுக்கவேண்டும். அதற்குப் பிறகு Market Cess 3 சதவீதமும், உள்ளாட்சி வரி

3 சதவீதம் வசூல் செய்கிறார்கள். அப்படியென்றால், விவசாயி விளைவித்த பொருட்களை விற்கும்போது, அதை வாங்குகின்ற வியாபாரி 8.5 சதவீதம் கூடுதலாகக் கொடுத்துதான் வாங்க வேண்டும். இது தேவையா? இதைத்தானே மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருக்கிறது. அங்கு சென்று ஒரு பொருளை விற்க வேண்டுமென்றால் 1 சதவீதம் Market செலவிற்காக வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள், எல்லா ஆட்சியிலும் தொடர்ந்து வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல. Market Area என்று ஒவ்வொரு சொசைட்டிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கித் தந்திருக்கிறார்கள்.

அந்த சொசைட்டியில் அந்த area-க்கு உட்பட்ட பகுதியில், வியாபாரி, விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வாங்கும்போது அதற்கு 1 சதவீதம் செலுத்த வேண்டும். இப்போது மத்திய அரசு கொண்டுவந்த சட்டப்படி, விவசாயி தனது விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பதற்குத்தான் அந்த வியாபாரி 1 சதவீதம் Cess கொடுக்கவேண்டும். ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் வெளியில் ஒரு வியாபாரி விவசாயிடம் விளைபொருட்களை அந்த சொசைட்டி சம்பந்தப்பட்ட Market Area-ல் வாங்கினால், இப்போது அந்த 1 சதவீத Cess கட்ட வேண்டியதில்லை. இது விவசாயிகளுக்கு பயனுள்ள சட்டம்தானே.

இதில் என்ன தவறு இருக்கிறது? விவசாயிகளை கட்டாயப்படுத்துவது கிடையாது, விவசாயிகள் விருப்பப்பட்டால் இந்தச் சட்டத்தின்படி உள்ளே வரலாம். இன்னும் எளியைசொல்ல வேண்டுமென்றால், 2010-ல் நாங்கள் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தோம். இந்த சட்டத்தில், ஒரு விவசாயி கத்திரி அல்லது தக்காளி பயிரிடுகிறார். 15 நாட்களுக்கு முன், கிருஷ்ணகிரியில் தக்காளி 1 ரூபாய்க்கு விற்று ரோட்டில் கொட்டினார்கள். விலை வீழ்ச்சியால் அந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கிறார்கள்.

ஆகவே, தக்காளி பயிரிடும்போது, வேளாண் வணிகத் துறையில் தக்காளி விலைக்கு வாங்குகின்ற வியாபாரி சென்று பதிவு செய்து அந்த விவசாயியிடம், நம்முடைய வேளாண் துறை அதிகாரிகள், இங்கு தக்காளி அதிகமாக விளைகிறது. நீங்கள் அந்த விவசாயிகளை அணுகி, நீங்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவார்கள். அந்த வியாபாரி, தக்காளி விளைவிக்கின்ற விவசாயிகளைச் சந்தித்து, நீங்கள் தக்காளி விற்பதற்கு எங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறீர்களா என்று அரசாங்கம் கூறிய வழிகாட்டு முறைகளின்படி அந்த விவசாயியும், அந்த வியாபாரியும் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

எப்படியென்றால், 35 ரூபாய்க்கு விற்கும்போது, அந்த வியாபாரி அந்த விவசாயியிடத்தில் ஒப்பந்தம் போட்டபின், அதை அறுவடை செய்கின்றபோது தக்காளி 10 ரூபாய்க்கு வந்துவிட்டாலும், ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது
35 ரூபாய்க்குத்தான் அந்த வியாபாரி வாங்க வேண்டும். அதே விலைக்குத்தான் அந்த வியாபாரி விலைக்கு வாங்க முடியும். ஆக, 25 ரூபாய் இலாபம் கிடைக்கின்றதல்லவா? ஒரு குறிப்பிட்ட அளவு விலை அதிகமானால், அதிலும் அந்த இலாபத்தில் ஒரு பங்கு விவசாயிக்குக் கொடுக்க வேண்டும்.

தக்காளி, காய்கறிகள் அதிகமாக விளைகின்றபோது விவசாயிகள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். ஆகவே, இந்தச் சட்டங்கள் விவசாயிகளை பாதுகாக்கக்கூடியது, அதுவும் விவசாயிகள் விரும்பினால்தான் போட்டுக் கொள்ளலாம், விவசாயிகள் விரும்பாததல்ல. ஆகவே, இந்தச் சட்டம் எங்களைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு பயனளிக்கும் சட்டம் என்ற காரணத்தினால் நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.