சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

பெட்டியில் மனுக்கள் போடும் ஸ்டாலின் திட்டத்துக்கு பூட்டு

முதலமைச்சர் சாட்டையடி

சென்னை

செல்போன் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தின் மூலம் ஸ்டாலினின் பெட்டிகளில் மனுக்களை போடும் திட்டத்திற்கு பூட்டு போடப்பட்டு விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்து போட்டு, அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறை கேட்கிறாராம். இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது மக்களை பற்றி சிந்திக்கவே இல்லை.

மக்களின் குறைகளை கேட்கவும் இல்லை, தீர்க்கவும் இல்லை. தற்போது ஆட்சியில் இல்லாத போது மக்களிடம் மனுக்களை வாங்கி, அதை பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, ஆட்சிக்கு வந்தவுடன், அந்த பெட்டியை திறந்து, 100 நாட்களில்
மனுக்களுக்கு தீர்வு காண்பாராம். எப்படி கதை விடுகிறார் பாருங்கள். இது விஞ்ஞான உலகம். அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. தகவல்கள் உடனுக்குடன் செல்கிறது. ஆகவே மக்களை முன்பு போல ஸ்டாலின் ஏமாற்ற முடியாது.

நான் ஏற்கனவே சட்டமன்ற விதி 110-ன் கீழ் அறிவித்தவாறு, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை நங்கவள்ளி ஒன்றியம், வனவாசியில் தான் துவக்கி வைத்தேன். இதற்கு இப்பகுதி மக்களே சாட்சி. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி, பதிவு செய்து, அங்கேயே முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகளை வழங்கினேன்.

சேலம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 9,77,638 மனுக்கள் வழங்கப்பட்டன. அதில் 5,22,812 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மக்களை சந்தித்து, மனுக்களை வாங்கி, தீர்வு கண்ட அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். உங்களை போல பெட்டியில் போடுகின்ற அரசாங்கம் அல்ல.

அதேபோல சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சரின் உதவி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தந்து, அதை செயல்படுத்திய அரசும் அம்மாவின் அரசு தான்.

இதன்மூலம் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் தங்கள் செல்போனில் 1100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு குறைகளை சொன்னால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இங்கு மனு வாங்குகின்ற வேலையும் இல்லை, பெட்டியில் போடுகின்ற வேலையும் இல்லை, பூட்டுகின்ற வேலையும் இல்லை. உங்கள் திட்டத்திற்கே பூட்டு போட்டாகி விட்டது.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம் தான் அவர்களுடைய வாரிசுகள். அந்த இருபெரும் தலைவர்கள் மக்களுக்காக தான் வாழ்ந்தார்.

தமிழ்நாடு ஏற்றம்பெற நல்ல பல திட்டங்களை தந்தார். அதேவழியில் அம்மாவின் அரசும் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஏழை எளிய மக்கள் நலன்பெற தொடர்ந்து பாடுபடும் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உயிர் முக்கியம்.

இன்றைக்கு விலையில்லாமல் தடுப்பூசியினை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். நான் போட்டுக் கொண்டேன். ஆகவே இளைஞர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக் கொண்டு நலமோடு, வளமோடு வாழ
வேண்டும்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதி முதலமைச்சரின் தொகுதி. நான் உங்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். மாதம் இருமுறை எடப்பாடி தொகுதிக்கு வந்து உங்களை சந்திக்கிறேன். பல்வேறு திட்டங்களை இந்த தொகுதியில் செயல்படுத்தி கொண்டிருக்கிறேன்.

தமிழகத்திலே முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி திகழ்ந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.உங்களுடைய பொன்னான வாக்குகளை இரட்டைஇலை சின்னத்திற்கு அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.